
உலு திராம், அக்டோபர்-14,
ஜோகூர், உலு திராமில், ‘Jualan Kasih Johor’ தீபாவளி சந்தையின் போது அருள்மிகு தேவ முனீஸ்வரர் ஆலய வளாகத்தில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யப்பட்டது – வட்டார இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கடையில் பெரிய ஆட்டிறைச்சி தொங்குவதுடன், மற்ற சில கடைகளில் மீன்களும் விற்கப்பட்டது, அங்கு மாமிச வாடையை ஏற்படுத்தியதாகக் கூறி, ஒரு பக்கர் எடுத்த வீடியோ முன்னதாக வைரலானது.
ஆலய நிர்வாகத்திடம் கேட்டால், ராஜாகோபுரத்திற்கு வெளியில் தான் அசைவ விற்பனை நடைபெறுவதாகவும், அது ஆலய வளாகமாக கருதப்படாது என்றும் பதில் வந்ததாம்.
வீடியோவை பார்த்த வலைத்தளவாசிகள், கோவில் புனிதத்தை அவமதிக்கும் செயல் என்றும், இந்து மரபுகளுக்கு எதிரானது என்றும் அதை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், கோவில் நிர்வாகத்தின் சார்பில் நடந்த தவற்றுக்கு ஸ்ரீ மகா முனீஸ்வரர் தேவஸ்தானம் அறிக்கை வாயிலாக வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுள்ளது.
இதுபோன்ற கவனக்குறைவு எதிர்காலத்தில் நடைபெறாமலிருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அது உறுதியளித்தது.
இதற்கிடையில், பி.கே.ஆர் தெப்ராவ் கிளைத் தலைவர் பிரகாஷ் மணியம், ‘Jualan Kasih’ போன்ற நல்வாழ்வுத் திட்டங்கள் மக்களுக்கு உதவுவதற்கே என்றாலும், அவை மத மற்றும் கலாச்சார உணர்வுகளை மதிக்கும் வகையில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வழிபாட்டு இடங்களுக்கு அருகில் நிகழ்ச்சிகள் நடத்தும்போது அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தினர் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென அவர் சொன்னார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதைத் தவிர்க்க, சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை மற்றும் பொறுப்பான சமூக ஈடுபாட்டை முன்னிறுத்தி, அனைவரும் கலந்துரையாடல் மூலம் தீர்வை நாட வேண்டும் என, ஜோகூர் பி.கே.ஆர் வியூக இயக்குநருமான அவர் கேட்டுக் கொண்டார்.