
கோலா திரெங்கானு, ஏப் 15-தொடர்ச்சியான துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளால், ஒரே வாரத்தில் அரசு ஊழியர் ஒருவர் மூன்று மோசடி சம்பவங்களால் 50,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையை இழந்தார்.
இந்த நிகழ்வுகளின் சங்கிலித்தொடர் ஏப்ரல் 8 ஆம்தேதியன்று தொடங்கியது. அன்றைய தினம் பாதிக்கப்பட்டவர் முகநூலில் ஒரு கார் விற்பனைக்கான விளம்பரத்தைக் கண்டதோடு , அந்தச் சலுகையில் ஆர்வம் கொண்ட அவர் , ஐந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ஆறு முறை பணப் பட்டுவாடா செய்துள்ளார்.
பணம் செலுத்திய பிறகு, கார் வாங்கும் பரிவர்த்தனை குறித்து பாதிக்கப்பட்டவருக்குச் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசில் புகார் செய்ததாக கோலா தெரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் அஸ்லி முகமட் நோர்
(Azli Mohd Noor ) கூறினார்.
முந்தைய ஆன்லைன் மோசடியைத் தீர்க்க உதவுவதற்காக, பாதிக்கப்பட்டவர் ஒரு ஆலோசகரின் உதவியை நாடி முகநூலில் தேடியபோது, தன்னை ஒரு வணிகக் குற்றப் புலனாய்வு அதிகாரி என்று கூறிக்கொண்ட ஒருவருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.
கார் வாங்கும் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக’, பாதிக்கப்பட்டவர் மூன்று வெவ்வேறு கணக்குகளில் மேலும் மூன்று பரிவர்த்தனைகளைச் செய்யும்படி வவற்புறுத்தப்பட்டார்.
தனது நஷ்டங்களை ஈடுகட்ட பாதிக்கப்பட்டவர் இணையவழிக் கடன் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சியினால் இல்லாத ஒரு கடன் திட்டத்தால் அவர் மீண்டும் ஏமாற்றப்பட்டார்.
இதன் விளைவாக, மூன்று வெவ்வேறு கணக்குகளில் மேலும் 10 பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. இறுதியில், பாதிக்கப்பட்டவருக்கு RM53,035 மொத்த இழப்பு ஏற்பட்டது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், நேற்று மாலை சுமார் 4.29 மணியளவில் கோலா தெரெங்கானு காவல் நிலையத்தில் புகார் செய்ததால் இந்த விவகாரம் தண்டனைச் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் மோசடி குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டு வருவதாக அஸ்லி முகமட் கூறினார்.



