ஜோகூர் பாரு, டிசம்பர்-22, துரித உணவகமொன்றில் வாங்கிய உணவுகளுக்கான கட்டண இரசீதுகளில் இஸ்லாத்தை அவமதிக்கும் வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதாக வைரலாகியுள்ள சம்பவத்தை, ஜோகூர் போலீஸ் விசாரித்து வருகிறது.
டிசம்பர் 19, 20-ஆம் தேதிகள் இடப்பட்ட அந்த இரசீதுகள், குளுவாங், பத்து பஹாட், மூவார் ஆகிய இடங்களில் ஒரே நபரால் வாங்கப்பட்ட துரித உணவுகளுக்கானவை.
ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் அதனை உறுதிப்படுத்தினார்.
சந்தேக நபர்களை அடையாளம் காண மேற்கொண்டு விசாரணைகள் நடைபெறுவதாக அவர் சொன்னார்.
இதுவரை தேச நிந்தனைச் சட்டம், குற்றவியல் சட்டம், தொடர்பு-பல்லூடக ஆணையச் சட்டம் ஆகியவற்றின் கீழ் 3 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.
மத உணர்ச்சிகளை சீண்டி, பொது அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் ஊறு விளைவிக்கும் இது போன்ற செயல்களை போலீஸ் கடுமையாகக் கருதுகிறது.
அவ்வாறு செய்வோருக்கு கரிசனம் காட்டப்படாது; மாறாக கடும் நடவடிக்கைகளை அவர்கள் எதிர்கொண்டாக வேண்டுமென டத்தோ குமார் எச்சரித்தார்.