
பங்கோர் தீவு, செப்டம்பர்-27,
பேராக்கில் நேற்று ஒரு விடுமுறை உல்லாசப் பயணம் சோகத்தில் முடிந்தது.
காலையில் தெலுக் பாத்தேக் கடலில் நீந்தச் சென்ற 60 வயது வி. தனபாலன் திடீரென காணாமல் போனார்.
கடலில் இறங்கிய பின் அவர் காணாமல் போனதாக குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர்.
அவர்கள் அங்கு விடுமுறைக்காக வந்திருந்ததுடன், சம்பவத்திற்கு முன் ஒரு பிரார்த்தனை நிகழ்வும் நடத்தியிருந்தனர்.
பின்னர் மாலையில் அவர் பங்கோர் தீவு கரையோரப் பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
மாலை 5.15 மணியளவில் மஸ்ஜித் அல்-பத்ர் செரிபு செலாவாட் (Masjid Al-Badr Seribu Selawat) அருகே, மிதந்து கொண்டிருந்த அவரின் உடலை பொது மக்கள் கண்டுபிடித்தனர்.
அது அவர் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.
முன்னதாக தேடுதல் நடவடிக்கையில் தீயணைப்பு நிலையங்களின் 3 படகுகள் மற்றும் மலேசிய கடல்சார் அமுலாக்க நிறுவனமான MMEA-வின் வீரர்கள் பங்கேற்றனர்.
உடல் பின்னர் தெலுக் பாத்தேக் கட்டுப்பாட்டு மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு, போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.