
தாப்பா, ஜனவரி-11 – தேசிய முன்னணியில் தொடருவதா, விலகுவதா என்பதை தைப்பூசத்துக்குப் பிறகே ம.இ.கா முடிவுச் செய்யும்.
அனைவரும் தைப்பூசத்துக்குத் தயாராகி வருவதால் முக்கியமான அரசியல் முடிவை பிப்ரவரி மத்திக்கு தாமதப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அதன் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
இறுதி முடிவு எதுவாக இருந்தாலும், அது தனி ஒருவரால் அல்ல, மாறாக மத்திய செயலவையால் தான் கூட்டாக எடுக்கப்படும் என்றார் அவர்.
எதிர்காலம் தொடர்பான பேச்சுகளால் ம.இ.கா – அம்னோ இடையில் அண்மையில் அறிக்கைப் போர் ஏற்பட்டாலும், தேசிய முன்னணியுடனான ம.இ.காவின் உறவு தற்போது வரை “அமைதியாகவும் நல்ல முறையிலும்” இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன், அத்தொகுதியில் B40 குடும்பங்களைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு கனோப்பிக் கூடாரம், இரம்பம், புல்வெட்டும் இயந்திரம் உள்ளிட்ட விவசாய உபகரண உதவவிகளை வழங்கிய நிகழ்வுவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
தாப்பா அம்னோ இடைக்கால தலைவரும் தாப்பா தேசிய முன்னணித் தலைவருமான Khairul Azmi Ghazali-யும் அந்நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
தேசிய முன்னணியிலிருந்து ம.இ.கா விலகி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைய விண்ணப்பிக்க வேண்டுமென கடந்த நவம்பர் மாத ம.இ.கா பொதுப் பேரவை தீர்மானம் நிறைவேற்றியது.
எனினும் இறுதி முடிவை தேசியத் தலைவர் மற்றும் மத்திய செயலவையிடம் விட்டு விட அப்போது முடிவுச் செய்யப்பட்டது.



