
கோலாலம்பூர், பிப்ரவரி-2 – தேங்காய்களுக்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தைப்பூசத்தின் போது தேங்காய் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுமாறு பினாங்கு முதல் அமைச்சர் கூறியிருப்பது கொஞ்சமும் ஏற்புடையதல்ல.
தொன்று தொட்டு தொடரும் பாரம்பரியத்தைத் தடுக்க அவருக்கு உரிமையில்லை என, மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் சாடியுள்ளார்.
தைப்பூசத்தின் போது தேங்காய் உடைப்பதென்பது வெறும் அலங்கார நிகழ்வல்ல; அது இந்துக்களின் சமய நம்பிக்கையாகும்.
தேங்காய் உடைத்து காணிக்கைச் செலுத்தினால் கெட்டது விலகி நல்லது நடக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.
அதை வேண்டாம் என்றோ குறைத்துக் கொள்ளுமாறோ கூற யாருக்கும் உரிமையில்லை என டத்தோ சிவகுமார் நினைவுறுத்தினார்.
முதலமைச்சர் Chow Kon Yeow என்னமோ தேங்காய் பற்றாக்குறை நேற்று முளைத்த பிரச்னை போல் பேசுகிறார்.
கடந்தாண்டு ஆகஸ்ட் முதலே அப்பிரச்னை இருந்து வருகிறது.
பஹாங் சட்டமன்றத்தில் கூட பேசப்பட்டுள்ளது.
அப்போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு தைப்பூச நேரம் பார்த்து அப்பிரச்னையைக் கையிலெடுப்பது முதல் அமைச்சருக்கு அழகல்ல.
பொறுப்புள்ள பதவிலிருப்பவர் உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும்?
தேங்காய் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அதை விடுத்து, தைப்பூசம் நெருங்கும் நேரத்தில் தேங்காய் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று பேசி, பக்தர்களின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என டத்தோ சிவகுமார் காட்டமாக பேசினார்.
பினாங்கு தைப்பூசத்தில் தேங்காய் உடைப்பது ஒரு முக்கியமான பாரம்பரியமாக இருந்தாலும், தற்போது தேங்காய் கையிருப்பில் தட்டுப்பாடு நிலவுவதை பக்தர்கள் புரிந்துகொள்ள வேண்டும்;
மக்களுக்கான உணவு உத்தரவாதம் பாதிக்காத வகையில், தேங்காய் உடைப்பில் பக்தர்கள் சிக்கனமாக இருப்பது சிறந்தது என, Chow Kon Yeow முன்னதாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.