
ஷா ஆலாம், அக்டோபர்-5,
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, இந்தியா மற்றும் இந்துக்கள் வாழும் மற்ற நாடுகளைப் போலவே மலேசியாவிலும் காலங்காலமாக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது; என்றாலும் 9 நாட்களுக்கும் வீட்டில் கொலு வைத்து நவராத்திரி கொண்டாடும் வழக்கம் பெரிதாக இங்கில்லை.
ஆனால், 25 ஆண்டுகளாக தொடர்ந்து வீட்டில் நவராத்திரி கொலு வைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது ஷா ஆலாமைச் சேர்ந்த ஷாந்தி ராமாராவ் குடும்பம்.
கடந்தாண்டைப் போலவே இவ்வாண்டும் விஜயதசமி எனப்படும் கடைசி பத்தாவது நாளை, பாரம்பரியத்தையும் பக்தியையும் இணைத்துப் புதுமையுடன் அக்குடும்பம் வெகுச் சிறப்பாகக் கொண்டாடியது.
தமிழ் திரையுலகின் மறைந்த நகைச்சுவை நடிகர் எஸ். ராமாராவ் அவர்களின் நான்காவது மகளும் மலேசிய மருமகளுமான ஷாந்தி ராமாரவின் வீடே விழாக் கோலம் பூண்டது.
பாரம்பரிய புடவை, சாமந்தி மாலைகள், விளக்குகள் என விழா மண்டபம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டது.
தனியாக செய்யாமல் ஊரார் ஒன்றுகூடி துர்கை அன்னையை மனங்குளிர வைப்பதே, இவ்விழாவினை விடாமல் நடத்தி வரக் காரணம் என ஷாந்தி ராமாராவ் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
இந்த நவராத்திரி விழாவில் ‘வெள்ளி விழா’ ஆண்டை தொட்டு விட்டாலும், தனக்கு ஒருபோதும் சலிப்பு ஏற்பட்டதில்லை என அவர் மகிழ்ச்சியுடன் சொன்னார்.
விழாவில் முதன் முறையாக பங்கேற்றவர்கள் சிலர், கொண்டாட்டத்தைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர்.
கடந்த ஆண்டுகளைப் போலவே இம்முறையும் இசைக் கச்சேரிக்கு தமிழகத்திலிருந்து வந்திருந்தார் மன்மத ராசா பாடல் புகழ் பாடகி கலைமாமணி மாலதி கிருஷ்ணன்.
விழாவில் பங்கேற்று துர்க்கை அன்னைப் புகழ் பாடுவது தமக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என அவர் வருணித்தார்.
அவரோடு, பின்னணி பாடகி விஜயலக்ஷ்மி, கோவை முரளி, கார்த்திக் உள்ளிட்டோரும் மேடைக் கச்சேரி நடத்தினர்.
சுமார் 200 பேர் கலந்து கொண்ட இவ்விழாவில், வருகையாளர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டதோடு, பெண்களுக்கு புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
பக்தி, இசை, கலாச்சாரம் மூன்றையும் இணைத்து ஒவ்வோர் ஆண்டும் நவராத்திரி விழாவை விமரிசையாக நடத்துவது ஷாந்தி ராமாராவ் குடும்பத்துக்கு ஆத்ம திருப்தியை கொடுக்கும் அதே வேளை, அதில் திரளாக வந்து பங்கேற்போரும் அன்னையின் ஆசீர்வாதம் பெற்றுச் செல்கின்றனர்.