
கோலாலம்பூர், ஆகஸ்ட்-3,
ஜோகூர் பாரு வரை ETS மின்சார இரயில் சேவையை விரிவுபடுத்துவதற்கான தனது கடப்பாட்டை, KTMB நிறுவனம் மறுஉறுதிப்படுத்தியுள்ளது.
இத்திட்டம் கட்டம் கட்டமாக முன்னேறி வருவதோடு, தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறை மைல்கற்களுக்கு உட்பட்டு சரியான இலக்கில் பயணிக்கிறது.
செகாமாட் முதல் குளுவாங் வரை பின்னர் JB சென்ட்ரல் வரையிலான இந்த ETS தெற்குத் துறைக்கான நிர்மாணிப்பு, கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் KTMB தெரிவித்துள்ளது.
குளுவாங்கின் அடுத்தப் பிரிவுக்கான சோதனை ஓட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன;
இந்நிலையில், தயார் நிலையை உறுதிச் செய்வதற்காக, குத்தகைக்காரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாகவும் KTMB தெரிவித்தது.
வழித்தடத்தின் எந்தவொரு புதிய பிரிவையும் பொதுமக்களுக்குத் திறப்பதற்கு முன்பு பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் தயார்நிலையை உறுதிச் செய்வதே KTMB-யின் முதன்மைப் பொறுப்பாகும்.
ஒவ்வொரு கட்டத்திற்கும் கடுமையான நெறிமுறையைப் பின்பற்றுவதாகவும் அது கூறியது.
“செகாமாட் – ஜோகூர் பாரு இடையிலான ETS இரயில் வழித்தட கட்டுமானம் இப்போதைக்கு நிறைவுப்பெறாது” என்ற தலைப்பில் முன்னதாக ஆங்கில நாளேட்டில் வெளியான கட்டுரை தொடர்பில் KTMB இவ்விளக்கத்தை அளித்துள்ளது.
செகாமாட்டுக்கான ETS சேவை கடந்த மார்ச் முதல் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.