
கோலாலம்பூர், ஏப்ரல்-14, தொழில்முறை நெறிமுறைகளுக்கு எதிராக வெளியிட்ட கருத்துகளுக்காக, நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்னோவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் நஸ்ரி அசிஸ் அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
துன் தெங்கு மைமுனின் சில கருத்துகள், உலகளவில் மலேசியர்களுக்கு மட்டும் ‘அவமானத்தைத்’ தேடித் தரவில்லை; மாறாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளதாக நஸ்ரி குற்றம் சாட்டினார்.
பிரதமர் நாட்டின் நீதி பரிபாலனத் துறையில் குறுக்கிடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கருத்துகளை வெளியிடுவது, நாட்டின் தலைமை நீதிபதிக்கு அழகல்ல என நஸ்ரி சொன்னார்.
தொழில்ரீதியாக மைமுனுடன் எந்தப் பிரச்னையுமில்லை; ஆனால், நாட்டின் உச்ச நீதிபதியைத் தேர்வு செய்வதில் பிரதமர் தலையிடக் கூடாது என அவர் பேசியது சரியல்ல; இது நடந்திருக்கவே கூடாது என,
சட்டத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான முன்னாள் அமைச்சருமான நஸ்ரி கூறினார்.
அதுவும் வெளிநாட்டில் போய் அவர் அப்படி பேசியிருப்பது உலக மக்கள் கண்ணோட்டத்தில் எதிர்மறையாகப் போய் சேராதா என நஸ்ரி கேள்வி எழுப்பினார்.
துன் தெங்கு மைமுனின் கருத்தானது, மலேசியா என்னமோ சட்டவிதிகளைப் பின்பற்றாத cowboy நாட்டை போலல்லவா பிரதிபதிக்கிறது;
தலைமை நீதிபதியாக அவர் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்; ஆனால் மடானி அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலலான கருத்தை அவர் வெளியிட்டிருக்கக் கூடாது.
எனவே, சிறப்பு செயற்குழுவை அமைத்து தெங்கு மைமுனை விசாரிக்க வேண்டுமென, அமைச்சரவைக்குத் தாம் பரிந்துரைப்பதாக , அமெரிக்காவுக்கான மலேசிய முன்னாள் தூதருமான நஸ்ரி அசிஸ் தெரிவித்தார்.
மல்தா நாட்டில் அண்மைய நடைபெற்ற 24-ஆவது காமன்வெல்த் சட்ட மாநாட்டில் தெங்கு மைமுன் பேசியிருந்ததை தான் நஸ்ரி சுட்டிக் காட்டினார்.
முன்னதாக, நாட்டின் தலைமை நீதிபதி நியமனம் உள்ளிட்ட சட்ட விவகாரங்களை மேம்படுத்தும் பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் கேட்க அரசாங்கம் தயாராக இருப்பதாக, மடானி அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.