
கோலாலம்பூர், டிசம்பர்-29,
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தொடர்பான 1MDB ஊழல் வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை DAP மறு உறுதிப் படுத்தியுள்ளது.
எந்தப் பதவியிலிருந்தாலும் ஊழலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் பொறுப்பேற்க வேண்டும் என்பதே DAP-யின் நிலைப்பாடு என, அதன் தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
1MBD விவகாரம் மலேசிய வரலாற்றில் மிகப் பெரிய நிதி ஊழல்களில் ஒன்றாகக் கருதப்படும் நிலையில், நீதிமன்றத் தீர்ப்பு சட்ட ஆட்சிக்கும் நீதித்துறைக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக இருப்பதாக, இலக்கவியல் அமைச்சருமான அவர் சொன்னார்.
இந்நிலையில், ஊழலற்ற நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியை உறுதிச் செய்வதற்கான DAP-யின் போராட்டம் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடிகளை உட்படுத்திய 1MDB வழக்கில் அனைத்து 25 குற்றச்சாட்டுகளிலும் நஜீப் குற்றவாளியே என புத்ராஜெயா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து, அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 11.38 பில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரத் தீர்ப்பு அரசியல் வட்டாரங்களிலும் பொது மக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை பெற்றுள்ள நிலையில், மலேசிய அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



