
கோலாலாம்பூர், அக்டோபர்-17,
கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி உள்ளூர் அரசியல் வட்டாரங்களிலும் மிகவும் ஆவலோடும் பரபரப்பாகவும் எதிர்பார்க்கப்படும் ம.இ.காவின் 79-ஆவது பொதுப் பேரவை, வரும் நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
நேற்றை மத்திய செயலவைக் கூட்டத்தில் அத்தேதி உறுதிச் செய்யப்பட்டதாக, தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முக்கிய அம்சமாக, தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடிக்கு மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்படாது என்ற அதிரடி அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
வழக்கம்போல் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் கலந்துகொள்ள மாட்டார்; எனவே இவ்வாண்டு பொதுப் பேரவையை தேசியத் தலைவரான தாமே தொடங்கி வைக்கப் போவதாக விக்னேஸ்வரன் கூறினார்.
இம்மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியிருக்கும் நிலையில், தேசிய முன்னணியில் ம.இ.கா நீடிக்குமா இல்லையா என்ற முடிவும் அதிலங்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய முன்னணியிலிருந்து ம.இ.கா விலக வேண்டுமென, சில மாநில ம.இ.கா பேராளர் மாநாடுகளில் முன்னதாக அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நினைவிருக்கலாம்.
இவ்வேளையில், தீபாவளியை முன்னிட்டு ம.இ.கா 27,000 உதவிப் பொருட்கள் வழங்கியுள்ளது; அடுத்தாண்டு 50,000 பொருட்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், கட்சியின் புதியத் தலைமையக கட்டுமானம் குறித்த திட்டங்களும் இறுதிச் செய்யப்பட்டுள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.