
கோலாலம்பூர், மார்ச்.12 – நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நிலையான மாத வருமானம் 25,700 ரிங்கிட். இதனைத் தவிர்த்து கூடுதலாக சில சிறப்பு அலவன்ஸ்களைச் சேர்த்தால் அவர்கள் மாத வருமானமாக 30,000 ரிங்கிட் முதல் 40,000 ரிங்கிட் வரை பெறாலம் என் விளக்கமளித்துள்ளது பிரதமர் அலுவலகம்.
சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடனாளி ஆகும் அளவிற்கு தங்களின் மாத வருமானம் குறைவு என குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
நாடாளுமன்ற கூட்ட அமர்வு, நாடாளுமன்ற அமர்வுகள் தவிர்த்து பங்கேற்கும் பொது தணிக்கை குழு அல்லது தேர்வு குழு கூட்டம், அதிகாரப்பூர்வ விளக்கக் கூட்டங்கள், சொந்த வாகனத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அலுவல் பயணங்கள், அதற்கான தங்குமிட வசதி செலவுகள் என இப்படி சில அம்சங்களைச் சேர்த்தால் நாடாளுமன்ற கூடுதல் அலவன்ஸ்களையும் பெறுகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இப்படி, நிலையான மாத வருமானம் மற்றும் சிறப்பு அலவன்ஸ் தொகை என இரண்டையும் சேர்த்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதம் 30,000 ரிங்கிட் முதல் 40,000 ரிங்கிட் வரை பெறுகிறார்கள்.
இந்நிலையில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்களின் நிதிநிலையை தாங்களே நிர்வகித்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் நினைவுறுத்தியிருந்ததும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தாங்கள் கடனில் மூழ்கிவிட்டதாக கூறி சில எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து பதிவிட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க இந்த விவகாரத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருவதையும் பிரதமர் அன்வார் முன்பு விமர்சித்திருந்தார்.
மேலும், எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாடாளுமன்றத் தொகுதிக்கான நிதியுதவி அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்டு வருகிறது என்பதையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.