
கோலாலம்பூர், நவம்பர் 10 – கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட ‘ஒப் நோடா’ (Op Noda) எனும் ஒருங்கிணைந்த சோதனையில் 398 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
118 பொழுதுபோக்கு மையங்களில் நடத்தப்பட்ட அச்சோதனையில் 103 மையங்கள் செல்லுபடியாகும் உரிமம் இன்றி செயல்பட்டதைப் போலீசார் கண்டறிந்துள்ளனர் என்று புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து மைய உரிமையாளர்கள், மூன்று மேலாளர்கள், 150 பணியாளர்கள், 112 வாடிக்கையாளர்கள் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 128 பெண்கள் (GRO)உள்ளடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சோதனையின் போது பணத் தொகை மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து சந்தேகநபர்களும் அருகிலுள்ள மாவட்ட காவல் நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டு, பதிவு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறியப்படுகின்றது.
இவ்வழக்கு ‘Eksais’ எனப்படும் உபவரி சட்டம், குடிநுழைத்துறை சட்டம் மற்றும் மாநில பொழுதுபோக்கு சட்டம் ஆகிய அனைத்து சட்டத்தின் கீழும் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றும், நாட்டின் அனைத்து பொழுதுபோக்கு மையங்களும் சட்டபூர்வமான உரிமம் பெற்று செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.



