Latestமலேசியா

நாட்டின் வரலாற்றைப் பாதுகாப்பதில் தேசிய ஆவணக்காப்பகம் சரியான பாதையில் பயணம் – தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு

தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு, மலேசிய தேசிய ஆவணக் காப்பகமான ANM வாயிலாக, நாட்டின் வரலாற்றை ஆவணப்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் தனது கடப்பாட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் Datuk Aaron Ago Dagang அமைச்சின் மாதாந்திர ஒன்றுகூடல் நிகழ்வில் உரையாற்றியபோது அதனைத் தெரிவித்தார்.


2023ஆம் ஆண்டில் ஆவணக் காப்பகத்தின் சேகரிப்பு 3.14 மில்லியன் கோப்புகளாக இருந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் 3.22 மில்லியன் கோப்புகளாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்தாண்டு, வெளிநாடுகளிலிருந்து 8,507 வரலாற்று ஆவணங்களை தேசிய ஆவணக் காப்பகம் பெற்றது. சிங்கப்பூர், கிழக்கு மலேசியா, புருணை, மலாய் மாநிலங்கள், மலாயா மற்றும் நீரிணைக் குடியேற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் அவற்றில் அடங்கும். அவை நாட்டின் உருவாக்க வரலாற்றைப் பொதுமக்கள் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும் முக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

வரலாற்று ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவது அவசியம் எனக் குறிப்பிட்ட Aaron, அவற்றைச் சேமித்து வைப்பதுடன் நிறுத்திவிடாமல், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் அணுகி ஆய்வு செய்யும் வகையில் மாற்ற வேண்டும் என்றார். மடானி அரசாங்கத்தின் கீழ், பிரதமர் தலைமையில் முதன்முறையாக தேசிய வரலாற்றாசிரியர்கள் மன்றம் அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே, விஸ்மா வாரிசானில் அமைந்துள்ள தேசிய ஆவணக் காப்பகத் தலைமையகத்தின் ஆய்வுக்கூடம் மற்றும் களஞ்சியத்தைப் புதுப்பிப்பது, ஜோகூர், மலாக்கா, கிளாந்தான், பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் புதிய வசதிகளை உருவாக்குவது, பினாங்கில் Tun Absullah Ahmad Badawi நினைவுக்கூடத்தை அமைப்பது உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும், அடுத்தாண்டு பள்ளிகள் மற்றும் சமூகங்களுக்கான ‘Archives@School’, ‘Archives@Community’ திட்டங்களை வலுப்படுத்துவது, தனியார் மற்றும் பெருநிறுவனத் துறைகளுடன் இணைந்து கண்காட்சிகளை நடத்துவது, தேசியத் தலைவர்களை நினைவுகூரும் திட்டத்தைச் செயல்படுத்துவது ஆகிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அவை ஆவணக் காப்பகச் சேவைகளைப் பொதுமக்கள் எளிதில் அணுகுவதற்கும், நாட்டின் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கும் உதவும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!