
செலாயாங், ஏப்ரல்-10, சிலாங்கூர், செலாயாங் ம.இ.கா தொகுதித் தலைவர் என். சிவஞானம், தாம் பி.கே.ஆர் கட்சியின் உறுப்பினர் எனக் கூறப்படுவதை மறுத்துள்ளார்.
“செலாயாங் ம.இ.கா தொகுதித் தலைவராக இருக்கும் நான், எதற்காக இன்னோர் அரசியல் கட்சியில் இணைய வேண்டும்?”
“அப்படியே இணைவதாக இருந்தாலும் பி.கே.ஆர் கட்சியில் ஏன் போய் சேர வேண்டும், அதுவொன்றும் இந்திய சமூகத்திற்கு உதவும் கட்சியல்லவே” என சிவஞானம் கேட்டதாக மலேசியா கினி செய்தி வெளியிட்டுள்ளது.
அக்குற்றச்சாட்டை முன்வைத்த பி.கே.ஆர் கட்சியின் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் ச்சுவா வேய் கியாட்டுக்கு எதிராக சிவஞானம் போலீஸ் புகாரும் செய்துள்ளார்.
ச்சுவா உடனடியாக அக்குற்றச்சாட்டை மீட்டுக் கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் செலாயாங் தொகுதித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ச்சுவா, சிவஞானம் பி.கே.ஆருக்குள் ‘ஊடுருவியிருப்பதாக’ முன்னதாக போலீஸில் புகார் செய்தார்.
சிவஞானம் கடந்தாண்டு அக்டோபரில் கட்சி உறுப்பினராக பதிவுச் செய்யப்பட்டதாகவும், இன்னும் எத்தனை ம.இ.கா உறுப்பினர்கள் அவரைப் போல் பி.கே.ஆருக்குள் ஊடுருவியிருப்பதாக தெரியவில்லை என்றும் ச்சுவா குற்றம் சாட்டினார்.
இது நிச்சயமாக, கட்சித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் ‘கீழறுப்பு’ வேலையே என அவர் கூறிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.