
ஈப்போட், அக்டோபர்-1,
2 வாரங்களுக்கு முன்பு ஒரு நாயை அடித்தே கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞருக்கு, ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் RM20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குற்றவாளியான 23 வயது எம். தெனிஷ்குமார் அபராதம் செலுத்தத் தவறினால் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
ஒரு மெக்கானிக்காக வேலை செய்யும் அவ்வாடவர், மோசமாகக் காயம் ஏற்படும் வரை இரும்பு கம்பியைக் கொண்டு ஆண் நாயை கொடூரமாக அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
செப்டம்பர் 18-ஆம் தேதி இரவு 10.30 மணி முதல் செப்டம்பர் 19 ஆம் தேதி காலை 9 மணி வரை ஒரு வீட்டில் அச்சம்பவம் நடந்துள்ளது.
புகார்தாரரும் தெனிஷ்குமாரின் அக்காவுமான பெண், இரத்த வெள்ளத்தில் நாயை கால்நடை கிளினிக்கிற்கு எடுத்துச் சென்றபோது, தலையில் அடிபட்டு அது இறந்தது உறுதிச் செய்யப்பட்டது.
பின்னர் மலேசிய விலங்குகள் அமைப்பின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, போலீஸார் அவ்விளைஞரைக் கைதுச் செய்தனர்.