
புத்ராஜெயா, ஏப்ரல்-26-நாட்டில் பதிவுச் செய்யப்பட்ட அமைப்புகள் பொது மக்களிடம் நிதி திரட்டுவதைக் கண்காணிக்க புதிய சட்டக் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து, சங்கங்களின் பதிவிலாகா தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் 1966-ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள RoS திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிதி திரட்டும் அமைப்புகளுக்குத் சுயேட்டை தணிக்கை முறையை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, அதன் தலைமை இயக்குநர் டத்தோ Mohd Zulfikar Ahmad தெரிவித்தார்.
அண்மையக் காலமாக, சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்கள் மில்லியன் கணக்கான ரிங்கிட் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், நிதி முறைகேடு தொடர்பாக RoS அலுவலகத்திற்கு 314 புகார்கள் வந்துள்ளன.
இதே காலக்கட்டத்தில், சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 21,013 அமைப்புகளின் பதிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேரடியாகவோ அல்லது சமூக வலைத் தளங்கள் வாயிலாகவோ நிதி திரட்டும் அனைத்து அமைப்புகளும் சரியான நிதிநிலை அறிக்கையைப் பராமரிக்க வேண்டும் என்றும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.



