
ஆக்லாந்து – ஆகஸ்ட்-4 – நியூசிலாந்தில் ஒரு பேருந்தில் சூட்கேஸ் எனும் பயணப்பெட்டிக்குள் 2 வயது சிறுமி கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, குழந்தையைப் அலட்சியப்படுத்தியதாக ஒரு பெண் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
குறிப்பிட்ட ஓர் இடத்தில் பேருந்தை நிறுத்திய போது ஓட்டுநர் அதனை கண்டுபிடித்தாக போலீஸ் கூறியது.
பேருந்து நின்றதும், சந்தேக நபரான அம்மாது, சூட்கேஸை பார்க்க வேண்டுமென ஓட்டுநரிடம் கூறியுள்ளார்; பெட்டிகள் வைக்குமிடத்தை திறந்து விட்ட போது, அப்பெண்ணின் சூட்கேஸ் தானாக அசைவதை கண்டு ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார்.
சந்தேகத்தில் அதைத் திறந்து பார்த்த போது 2 வயது சிறுமி உள்ளே பலவீனமாக இருந்தாள். தீவிர மேல் சிகிச்சைக்காக அவள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
அதிக வெப்பத்தால் அவள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றபடி ஆபத்தேதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
27 வயது பெண் உடனடியாக கைதுச் செய்யப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றத்தில் அவர் குற்றம் சாட்டப்படுகிறார். அவர் எதற்காக குழந்தையை சூட்கேஸில் அடைத்து வைத்தார் என்பது நீதிமன்ற விசாணையில் தான் தெரிய வருமென போலீஸ் கூறியது.