
வாஷிங்டன், செப்- 8 – பூமியில் நாடுகளுக்கு எல்லைகள் இருக்கலாம்; ஆனால் நிலவுக்கும் உரிமை கொண்டாட முடியுமா? “THE MOON IS OURS” என்ற வாசகத்துடன் நிலவையும் அமெரிக்கக் கொடியையும் இணைத்து அதிபர் டோனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட பதிவு, தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Truth Social-இல் வெளியான இந்தப் பதிவு, “நிலவு அமெரிக்காவுக்குச் சொந்தமானது” என்ற கருத்தை முன்வைப்பதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இது அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ உரிமைகோரல் அல்ல; ட்ரம்பின் சமூக வலைத்தளப் பதிவாகவே வெளியாகியுள்ளது.
இருப்பினும், அவரது கூற்று சர்வதேச விண்வெளிச் சட்டத்துடன் முரண்படுகிறது. 1967 Outer Space Treaty-யின்படி, நிலவு உள்ளிட்ட விண்வெளிப் பகுதிகளை எந்த நாடும் தனது இறையாண்மையின் கீழ் சொந்தம் கொண்டாட முடியாது. முக்கியமாக, இந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதில் பங்காற்றிய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
ட்ரம்பின் பதிவு இதோடு மட்டும் நிற்கவில்லை. அதற்கு சற்று முன்னதாக அமெரிக்க Space Force வீரர்களுக்கான புதிய சீருடைகள் எனக் கூறி AI மூலம் உருவாக்கப்பட்டதாகத் தோன்றும் படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.
அண்மையில் Lake Ontario-வை “Lake America” எனப் பெயர் மாற்றும் முயற்சியாலும் ட்ரம்ப் கவனம் ஈர்த்திருந்தார். இந்நிலையில், தற்போது “The Moon Is Ours” என அவர் பதிவிட்டிருப்பது, அவரது அடுத்த சர்ச்சைக்குரிய உரிமைகோரலாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.



