
கோத்தா பாரு, ஏப்ரல் 4 -ஜனவரி தொடக்கத்தில் மூன்று போக்குவரத்து குற்றங்களுக்கான சம்மன்களுக்கு 150 ரிங்கிட் என்ற சீரான அபராத தொகைக் கொண்ட சிறப்பு சலுகை தொடங்கப்பட்டதிலிருந்து, இன்னும் 35 மில்லியன் ரிங்கிட் அபாராத தொகையை வசூல் செய்வதற்கான குற்றப் பதிவுகள் நிலுவையில் உள்ளன. சிறப்பு கூட்டுச் சலுகையானது மூன்று வகையான JPJ சம்மன் அறிவிப்புகளை உள்ளடக்கியது. தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு அமைப்பு (AWAS) சம்மன்கள் (53A சம்மன்கள்), விசாரணை அறிவிப்பு (114) மற்றும் Tampal/JPJ(P)23 (115) சம்மன் அறிவிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளதாக சாலை போக்குவரத்துத் துறையின் மூத்த இயக்குநர் முகமட் கிப்லி மா ஹசான் ( Muhamad Kifli Ma Hasan ) தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 2 மில்லியன் சம்மன்களுக்கு அல்லது குற்றப் பதிவுக்கான அபராத தொகையை வாகன ஓட்டுனர்கள் இன்னும் செலுத்தாமல் உள்னனர். இந்த சம்மன்களுக்கான அபராதத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் இவ்வாண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைவதால் சம்மன் பெற்றவர்கள் அவற்றுக்கு விரைந்து தீர்வு காணும்படி முகமட் கிப்லி கேட்டுக்கொண்டார்.
கடந்த ஜனவரியில் தொடங்கிய சிறப்பு கூட்டுச் சலுகையுடன் இணைந்து மூன்று வகையான சம்மன்களுக்கான அபராத தொகையில் நேற்றுவரை மொத்தம் 35 மில்லியன் ரிங்கிட் வெற்றிகரமாக வசூலிக்கப்பட்டது. இந்தச் சிறப்புச் சலுகை ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைவதால்,150 ரிங்கிட் அபராதம் என்ற விகிதத்தில் தங்கள் நிலுவைத் தொகையை உடனடியாகத் தீர்க்க இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என நம்புவதாக முகமட் கிப்லி கூறினார்