
இஸ்லாமாபாத், மே-10- ராவல்பிண்டியில் உள்ள “நூர் கான்” விமானத் தளம் உட்பட தனது 3 முக்கிய விமானத் தளங்களை இந்திய ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக, பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
நேற்றிரவு நடத்தப்பட்ட அத்தாக்குதலில், வானிலிருந்து தாக்கும் ஏவுகணையை இந்தியா பயன்படுத்தியதாக பாகிஸ்தான் கூறிக் கொண்டது.
எனினும் அது குறித்து இந்தியா சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்திய ஏவுகணைகளால் தகர்க்கப்பட்ட ‘நூர் கான்’ விமானத் தளமானது, பாகிஸ்தான் இராணுவத்துக்கான பல்வேறு உபகரணங்களின் சேமிப்புக் கிடங்காகும்.
போர் விமானங்களுக்கு வான்வெளியிலேயே எரிபொருள் நிரப்பவும், இராணுவத் தளவாடங்களை ஏற்றி செல்லும் விமானங்களை நிறுத்தி வைக்கவும் அது முக்கியப் பங்காற்றுகிறது.
3 முக்கிய விமானத் தளங்களை இந்தியா தாக்கியத்தை தொடர்ந்து பாகிஸ்தானின் வான்வெளி எல்லைகள் முழுவதுமாக மூடப்பட்டன.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.10 மணி முதல் மதியம் 12 மணி வரை வான் பரப்பில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானத் தளங்களை குறி வைத்து ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு பதிலடியாக, இந்தியா பாகிஸ்தானின் விமானத் தளங்களை தாக்கியுள்ளது. இதுவரையில் துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஏறக்குறைய 400 ட்ரோன்களை கொண்டு பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளைக் குறிவைத்து தாக்கியுள்ள நிலையில் அவற்றை இந்தியா வெற்றிகரமாக முறியடித்துள்ளது.