
கோலாலம்பூர், மே 2 – கோலாலம்பூர் – சிரம்பான் நெடுஞ்சாலையில் வெளியேறும் பகுதியில் உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியதைத் தொடர்ந்து அதில் இருந்த மூவர் மரணம் அடைந்தனர்.
அந்த கார் மிகவும் மோசமாக நொறுங்கியதால் சுங்கை பீசி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காருக்குள் இருந்தவர்களை வெளியே மீட்டனர். சுவரில் மோதியதில் மிகவும் மோசமாக சேதமடைந்த அக்காரின் மையப் பகுதியை கனரக இயந்திரத்தினால் வெட்டி மூவரின் உடல்களையும் மீட்டனர்.
தகவல் அறிந்து காலை மணி 6.07 அளவில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு டோயாத்தா வியோஸ் கார் சாலையிலிருந்து நழுவி வாகனங்கள் வெளியேறும் பகுதியிலுள்ள தடுப்புச் சுவரில் மோதியிருந்ததை கண்டதாக தீயணைப்பு நடவடிக்கை குழுவின் அதிகாரி ஷாரும் டின் ( Shahrum Din) கூறினார்.
அக்காரில் சிக்கிக் கொண்ட மூன்று இந்திய ஆடவர்களை வெளியே கொண்டுவருவதற்கு ஒரு மணி நேரம் பிடித்ததாக வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார். விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அந்த மூவரும் இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதால் அவர்களின் உடல்கள் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது