
ரெம்பாவ், ஜூலை 3 – கடந்த புதன்கிழமை, பெடாஸ் லிங்கி ஓய்வெடுக்கும் பகுதிக்கு (R&R ) அருகேயுள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை மூன்று கார்கள் முழுவதுமாக மறித்து நிற்கும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து அவ்வாகன உரிமையாளர்களை வலை வீசி தேடி வருவதாக ரெம்பாவ் மாவட்ட காவல்துறைத் தலைவர், ஹசானி ஹுசைன் கூறியுள்ளார்.
சாலைப் பயனர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் வாகனத்தை ஓட்டியதற்காக தண்டனைச் சட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தக்க ஆதாரங்களோடு அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், 2,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
உயிரிழப்பை ஏற்படுத்த கூடிய செயலைப் புரிந்த சந்தேக நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை அடுத்த 12 மாதங்கள் வரை ரத்து செய்ய கூடிய வாய்ப்பும் அதிகமுள்ளது என்று ஹசானி குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினரை அணுக வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.