
சிரம்பான், ஆகஸ்ட்-17- நாட்டின் மிக மூத்த கூட்டுறவுக் கழகங்களில் ஒன்றான நேசா பல்நோக்குக் கூட்டுறவுக் கழக உறுப்பினர்களுக்கு இவ்வாண்டு 8 விழுக்காடு இலாப ஈவு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரம்பானில் நேற்று நடைபெற்ற நேசாவின் 40-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் மற்றும் 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தில், அதன் தலைவர் டத்தோ சசிகுமார் பழனியப்பன் அவ்வறிவிப்பை வெளியிட்டார்.
நேசாவின் பொன்விழாவை ஒட்டி கழக உறுப்பினர்களுக்கு 20% போனஸ் வழங்கவும் முடிவுச் செய்யப்பட்டுள்ளதாக, பலத்த கரவொலிக்கு இடையில் அவர் அறிவித்தார்.
கூட்டுறவுக் கழக ஆணையத்திடம் அதற்கான அனுமதிப் பெறப்படும் என்றார் அவர்.
மக்கள் தங்களின் பொருளாதார தேவைகளைப் பூர்த்திச் செய்ய தொடங்கப்பட்ட கூட்டுறவுக் கழகமான நேசா, உறுப்பினர்கள் நலன் கருதி பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் சசிகுமார் தெரிவித்தார்.
அவ்வகையில் கடந்தாண்டு 1.3 மில்லியன் ரிங்கிட் இலாபத்தைப் பதிவுச் செய்த நேசா, 40 ஆண்டுகளுக்குப் பிறகு வீடமைப்புத் திட்டமொன்றை மேற்கொண்டு அதன் மூலம் 2 மில்லியன் ரிங்கிட் வருமானத்தை ஈட்டியது.
தவிர, கோலாலம்பூர் சென்ட்ரல் வணிக வளாகத்திலுள்ள கட்டடங்கள், சிரம்பானில் ஒரு தங்கும் விடுதி, ஜோகூர் பாருவில் 2 கூடுதல் கட்டடங்கள், செராஸில் பெட்ரோல் நிலையம் அமைப்பதற்கான நிலம் உள்ளிட்டவை, நேசா அண்மையில் வாங்கிய சொத்துடைமைகளாகும்.
இவையனைத்தும் நீண்ட காலத்திற்கு நேசாவுக்கு நிலையான நிரந்தர வருமானம் தரக்கூடியவை என சசிகுமார் கூறினார்.
SPM, STPM தேர்வில் சிறந்து விளங்கிய கழக உறுப்பினர்களின் பிள்ளைகள் 45 பேருக்கு, அந்நிகழ்வில் நேசாவின் கல்வி நிதியிலிருந்து மொத்தமாக 36,900 ரிங்கிட் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.
நேசாவின் இந்த ஆண்டுக் கூட்டத்தில் கழக உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என சுமார் 400 பேர் கலந்துகொண்டனர்.