Latestமலேசியா

நேப்பாளத்தில் மலேசியர் பாதுகாப்பாக மீட்பு: அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காதது ஏன்? – குடும்பத்தினர் கேள்வி

கோலாலம்பூர், அக்டோபர்-12,நேப்பாளப் பெரு வெள்ளத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட மலேசியர் ஒருவர், செப்டம்பர் 3-ஆம் தேதியே தனது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், இந்த விவகாரம் குறித்து மலேசிய அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படாதது ஏன் எனப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேப்பாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, 55 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

அவர்களில் Low என மட்டுமே அடையாளம் கூறப்படும் ஒருவர் அக்டோபர் ஒன்றாம் தேதி காட்மண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்திற்குச் சென்று தாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தினார்.

பின்னர் அக்டோபர் 2-ஆம் தேதி அவர் மலேசியாவுக்குத் திரும்பினார்.

நேற்று Low-வை நேரில் சந்தித்த பின்னரே, அவரது நிலைமை குறித்து தமக்குத் தெரியவந்ததாக, அக்குழுவின் பேச்சாளர் R. மணிவண்ணன் கூறினார்.

அதே சமயம், Low ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும், அவரது குடும்பத்தினரிடமிருந்து DNA மாதிரிகள் சேகரிக்கப்பட்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், எஞ்சியுள்ள 54 மலேசியர்களின் நிலைமை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அவர்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையும், சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு முறையான தகவல் பரிமாற்றமும் அவசியம் என மணிவண்ணன் வலியுறுத்தினார்.

இதனிடையே நேப்பாளத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி தேடல் மற்றும் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்ட போதிலும், உடல்களை மீட்கும் மற்றும் அடையாளம் காணும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, DNA பரிசோதனை மூலம் உடல்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!