
காத்மாண்டு, செப். 3 – நேப்பாள வெள்ளத்தில் சுற்றியிருந்த வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், வெள்ளத்தின் நடுவே தனித்து நின்ற ஒரு ‘பச்சை வீடு’ பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால், அந்த வீட்டிலிருந்து ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்ட பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
நுவாகோட் மாவட்டத்தின் திரிசூலி பகுதியில் உள்ள அந்த வீட்டை வெள்ளம் சூழ்ந்தபோது, அதன் வேகத்தில் வீடே அதிரத் தொடங்கியது. உயிருக்கு அஞ்சிய ஆறு பேர் கொண்ட குடும்பம் வீட்டின் மேற்பகுதியில் தஞ்சமடைந்தது.
எந்த நேரத்திலும் வீடு இடிந்து விழலாம் என்ற அச்சம் நிலவிய நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த நான்கு முதல் ஐந்து பேர் துணிச்சலுடன் சென்று, சிக்கியிருந்த ஆறு பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
தங்களை மீட்டவர்களை “கடவுளுக்கு நிகரானவர்கள்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட வீட்டின் உரிமையாளர் லட்சுமி பாண்டே, உயிர் தப்பியதை “எங்களுக்கு கிடைத்த மறுபிறவி” என வர்ணித்தார்.
ஆற்றை நேரடியாக எதிர்கொள்ளாமல் கோணமாக அமைந்திருந்ததும் அந்த வீடு தப்பியதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. எனினும், வெள்ளத்தில் வீடு கடுமையாக சேதமடைந்ததால், குடும்பத்தினர் தற்போது அங்கு வசிக்காமல் வேறு இடத்தில் தங்கியுள்ளனர்.



