
ஷா அலாம் , ஏப் 16 – செத்தியா அலாம், நோர்த் ஹம்மோக் ( Ladang North Hummock ) தமிழ்ப் பள்ளியின் அறிவியல் கூட சீரமைப்பு பணிக்காக ம.இகாவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ
S. A. விக்னேஸ்வரன் இன்று 50 ,000 ரிங்கிட்டிற்கான காசோலை
வழங்கினார்.
இன்று காலையில் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விக்னேஸ்வரன் இந்த காசோலையை நோர்த் ஹம்மோக் தோட்ட தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் ஆறுமுகம் சுப்ரமணியத்திடம் ஒப்படைத்தார். இந்த பள்ளியில் அறிவியல் கூடம் முழுமையாக சீரமைக்கப்பட்டவுடன் காலஞ்சென்ற ம.இ.காவின் முன்னாள் தேசிய தலைவர் துன் சாமிவேலு அறிவியல் கூடம் என்ற பெயரில் செயல்படும்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் பள்ளியின் வகுப்பறைகளை சுற்றிப்பார்த்த எம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அங்குள்ள மாணவர்களையும் நேரில் சந்தித்து அவர்களுடன் மகிழச்சியுடன் உரையாடினார்.
இதனிடையே நோர்த் ஹம்மோக் தோட்ட தமிழ்ப் பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் தேவையென LPS எனப்படும் பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் ஆறுமுகம் சுப்ரமணியம் தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு இப்பள்ளியில் 75 மாணவர்கள் இருந்ததை ஒப்பிடுகையில் இப்போது 480 மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வருவதாக வணக்கம் மலேசியாவிடம் ஆறுமுகம் கூறினார்.
செத்தியா அலாம் சுற்று வட்டாரத்திலுள்ள அதிகமான இந்திய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நோர்த் ஹம்மோக் தோட்ட தமிழ்ப் பள்ளியில் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் இட பற்றாக்குறையால் இந்த ஆண்டுகூட கிட்டத்தட்ட 20 அல்லது 30 மாணவர்கள் இந்த பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு அனுப்பப்பட்டதையும் ஆறுமுகம் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாளர் வாரியத்தின் துணைத் தலைவர் மணியம் அருணாச்சலம் , காப்பார் தொகுதி காங்கிரஸ் தலைவர் கலையரசன் மற்றும் ஆசிரியர்களும் திரளாக கலந்து கொண்டனர்