
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19 – ஆரம்பப் பள்ளிகளிலிருந்தே பகடிவதைக் கலாச்சாரத்தை வேரறுக்க மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் விடுத்துள்ள அறைக்கூவலை, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் ஆதரித்துள்ளார்.
பகடிவதை என்பது பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை மட்டும் பாதிக்கவில்லை; மாறாக ஒருவரை ஒருவர் மதிக்கும் மற்றும் அன்போடு அரவணைக்கும் பண்புகளை இழந்த ஒரு தலைமுறையையே உருவாக்கி விடும் என்பதை மாமன்னரின் நினைவூட்டல் உணர்த்துகிறது என்றார் அவர்.
இந்நிலையில் தமதமைச்சு, வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் ஆகியவற்றில் தேசிய அளவில் பகடிவதைத் தடுப்புப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக ஃபாஹ்மி சொன்னார்.
பகடிவதை எதிர்ப்பு பிரச்சாரங்கள் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் சமூகத்தைச் சென்றடைவதை உறுதிச் செய்ய, அமைச்சுகளுக்கு இடையிலும் ஒத்துழைப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பகடிவதைத் தடுப்பு பிரச்சாரத்தோடு, ஒருவரை ஒருவர் மதித்தல், கட்டொழுங்கின் அவசியம், அன்பு பாராட்டுதல் போன்ற நற்பண்புகளும் விதைக்கப்படுகின்றன என்றார் அவர்.
தவிர, பகடிவதைக் குற்றங்களுக்கு மேலும் கடுமையான தண்டனைகளை விதிக்க ஏதுவாக சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதையும் ஃபாஹ்மி சுட்டிக் காட்டினார்.
நாட்டில் பகடிவதைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆரம்பப் பள்ளி அளவிலேயே அக்கலாச்சாரம் முறியடிக்கப்பட வேண்டுமென சுல்தான் இப்ராஹிம் நேற்று வலியுறுத்தியிருந்தார்.