
கிளந்தான், ஜூலை 4 – கடந்த வெள்ளிக்கிழமை கிளந்தான் பாசிர் மாஸ் மற்றும் தும்பட் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆறு அதிரடி சோதனைகளில், 35.4 கிலோவுக்கும் அதிக எடையிலுள்ள 5.04 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்திய “பில் குடா” (yaba) கடத்தல் கும்பலை காவல்துறையினர் வெற்றிகரமாக கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட 25 முதல் 39 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட ஆறு உள்ளூர் சந்தேக நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர் என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் செயல் இயக்குநர் மாட் ஜானி @ சலாஹுதீன் சே அலி (Mat Zani @ Salahuddin Che Ali) கூறியுள்ளார்.
சந்தேக நபரின் காரில் 115 கிராமும், வீட்டில் 112 கிராமும் மற்றும் வீட்டின் பின்னால் இருந்த மாட்டு கொட்டகைகளில் 20 கிலோ யாபா மாத்திரைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்காக கிளந்தான் போலீஸ் படையுடன் இணைந்து புக்கிட் அமான் காவல்துறையினரும் முயற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த மாத்திரைகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு, தானா மேராவில் உள்ள கடல் உணவு உணவகம், சலூன் மற்றும் ஆன்லைன் வணிகங்களை அக்கும்பல் நடத்தி வருவதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று மாட் ஜானி குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பரிசோதனையில் போதைப்பொருட்களை தவிர 4 சக்கர வாகனங்கள், நகைகள் மற்றும் சொகுசு வாகனங்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.