
பத்து பஹாட், செப்டம்பர்-29,
ஜோகூர் பத்து பஹாட்டில் சனிக்கிழமை இரவு 2 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், ஒரு பெண் மரணமடைந்த வேளை, ஐவர் காயமுற்றனர்.
மேலும் நால்வர் காயமின்றி உயிர் தப்பினர்.
ஆயர் ஹீத்தாம், ஜாலான் குளுவாங்கில் நிகழ்ந்த அவ்விபத்தில் ஒரு காரும், MPV வாகனமும் மோதிக் கொண்டன.
ஆயர் ஹீத்தாமிலிருந்து குளுவாங் சென்றுகொண்டிருந்த காரை, திடீரென சாலையோரத்திலிருந்து சாலைக்குள் புகுந்த MPV மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அதில், நெஞ்சிலும் உள்ளுறுப்புகளிலும் பலத்த காயங்களுக்கு ஆளான 54 வயது மாது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதே காரிலிருந்த இதர மூவர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
MPV-யில் இருந்த 6 பேரில் நால்வர் காயமின்றி தப்பிய வேளை, 73 வயது மூதாட்டியும் 13 வயது பெண் பிள்ளையும் கால்களிலும் முகத்திலும் காயமடைந்தனர்.