கோலாலம்பூர், டிசம்பர்-20, பத்து பூத்தே விவகாரத்தில் பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்தை, போலீஸ் விசாரித்து வருகிறது.
ஹாடி அவாங்கின் X தளத்தில் பதிவேற்றப்பட்ட அக்கருத்து பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலிருப்பதாகக் கூறி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து குற்றவியல் சட்டத்தோடு, 1998 தொடர்பு-பல்லூடகச் சட்டத்தின் கீழும் ஹாடி விசாரிக்கப்படுவதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் (Tan Sri Razarudin Husain) கூறினார்.
அவரிடம் விரைவிலேயே வாக்குமூலம் பதிவுச் செய்யப்படுமென IGP சொன்னார்.
பத்து பூத்தே உரிமைக் கோரல் பிரச்னை ICJ எனப்படும் அனைத்துலக நீதிமன்றம் வரை சென்ற நிலையில், அது சிங்கப்பூருக்கே சொந்தம் என 2008-ஆம் ஆண்டு தீர்ப்பு வந்தது.
அதே சமயம், அத்தீவிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் பத்துவான் தெங்கா (Batuan Tengah) மலேசியாவுக்குச் சொந்தம் என ICJ அறிவித்தது.
பத்து பூத்தேவிலிருந்து ஒரு 4 கிலோ மீட்டர் தூரத்தில் தள்ளியிருக்கும் தூபிர் செலாத்தான் (Tubir Selatan) யாருக்குச் சொந்தமென்பது, அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நாட்டின் நீர் எல்லைக்கு ஏற்ப முடிவுச் செய்யப்படுமென ICJ அறிவித்தது.
இந்நிலையில் பத்து பூத்தே தீவு கைவிட்டுப் போனதற்கு எதிரான மேல்முறையீட்டை, 2018-ஆம் ஆண்டு துன் Dr மகாதீர் முஹமட் தலைமையிலான பக்காத்தான் அரசாங்கம் மீட்டுக் கொண்டது.
அம்முடிவுக்காக மகாதீர் மீது குற்றவியல் விசாரணை நடத்தலாமென, அரச விசாரணை ஆணையம் அண்மையில் பரிந்துரைத்ததால் இவ்விவகாரம் சூடு பிடித்துள்ளது.