புத்ராஜெயா, டிசம்பர்-17,vபத்து பூத்தே விவகாரத்தில், 3 முன்னாள் அமைச்சர்கள் பொய் சொல்வதாக துன் டாக்டர் மகாதீர் முஹமட் குற்றம் சாட்டியுள்ளார்.
அம்மூவரையும் அமைச்சர்களாகப் பெற்றதற்கு தாம் உண்மையிலேயே வெட்கப்படுவதாக, மகாதீர் கடுமையாகச் சாடினார்.
மகாதீரிடம் துணைப் பிரதமராக இருந்த டத்தோ ஸ்ரீ Dr வான் அசிசா வான் இஸ்மாயில், தற்காப்பு அமைச்சராக இருந்த டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு, போக்குவரத்து அமைச்சராக இருந்த அந்தோனி லோக் ஆகியோரே அம்மூவராவர்.
பத்து பூத்தே உரிமைக் கோரல் மீதான முடிவுக்கு எதிரான மேமுறையீட்டை, தமது தலைமையிலான 2019 அமைச்சரவை மீட்டுக் கொண்ட விவரங்கள் கசிந்திருப்பது குறித்து, மகாதீர் Sinar Harian-னிடம் கருத்துரைத்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் கைகளுக்கு அந்த கூட்ட நிகழ் கிடைத்துள்ளது.
அதில், பத்து பூத்தே மேல்முறையீட்டை மீட்டுக் கொள்ள அன்றைய அமைச்சரவை கூட்டாக முடிவுச் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, பத்து பூத்தே விஷயத்தில் அமைச்சரவையைக் கலந்தாலோசிக்காமல் தாம் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக, அம்மூன்று அமைச்சர்களும் கூறியது பொய்யென நிரூபணமாகியுள்ளதாக மகாதீர் சொன்னார்.
பத்து பூத்தே இறையாண்மை மீதான விவகாரம் கையாளப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம், மகாதீர் மீது குற்றவியல் விசாரணையைத் தொடங்க பரிந்துரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேல் முறையீட்டை மீட்டுக் கொண்டதன் மூலம், பத்து பூத்தேவை மகாதீர் சிங்கப்பூருக்குத் தாரை வார்த்திருப்பதாக அவ்வாணையம் கண்டறிந்துள்ளது.
ஆனால் அவ்விஷயத்தில் அனைத்து நடைமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டே முடிவெடுக்கப்பட்டதாக மகாதீர் தற்காத்துள்ளார்.