
கோலாலம்பூர், மே-6- டத்தின் ஸ்ரீ பேமலா லிங் யுவே காணாமல் போன சம்பவம், போலீஸ் அவரைக் கடத்தியதா அல்லது போலீஸ் போல் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் கடத்தினார்களா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.
தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் அதனைத் தெரிவித்தார்.
போலீஸ் ‘வெஸ்ட்’ மேலங்கி அணிந்த நபர்கள் பேமலாவைக் கடத்திச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறித்து அவர் கருத்துரைத்தார்.
ஏப்ரல் 9-ஆம் தேதி புத்ராஜெயா MACC அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்கச் செல்லும் வழியில் மறித்து, அந்த மர்ம நபர்கள் பேமலாவை கடத்திச் சென்றதாக அவரை ஏற்றிச் சென்ற e-hailing ஓட்டுநர் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்த CCTV கேமரா பதிவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தற்போதைக்கு அந்த e-hailing ஓட்டுநர் உட்பட சம்பவத்தை நேரில் பார்த்த அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களும் திரட்டப்படுவதாக, IGP சொன்னார்.
பேமலா வசதியானவர் என்பதால் அவரின் சொத்துக்களைக் குறி வைத்து அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை.
என்றாலும் விசாரணைக்கு இடையூறாக அமையுமென்பதால், மேற்கொண்டு விவரங்களை இப்போதைக்கு வெளியிட முடியாது என்றார் அவர்