
கோலாலம்பூர், ஜனவரி 16-பத்துமலையில் மின்படிகட்டு அமைப்பது தொடர்பாக இனி தாம் எந்தவொரு கருத்துக்களையோ செய்திகளையோ வெளியிடப்போவதில்லை என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்.
மின்படிகட்டு சர்ச்சை தொடர்பாக இழப்பீடு கேட்டு தமக்கு வழக்கறிஞர் கடிதம் அனுப்பப்பட்டுள்ள அதே வேளையில் மாநில அரசின் மீதும் பத்துமலை ஆலய நிர்வாகம் வழக்கு தொடுத்துள்ளதாகவும் தற்போது இவ்விரண்டு வழக்குகளும் நீதிமன்றத்தில் இருப்பதால் இதனை நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டு விடுவதாக அவர் கூறினார்.
தமக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை எதிர்கொள்வதற்காக தமது சார்பில் வழக்கறிஞரை நியமித்துள்ளதாகவும் நாட்டின் நீதி பரிபாலனத்தையும், கூட்டரசு அரசியல் அமைப்பு சட்டத்தையும் தாம் முழுமையாக மதிப்பதாகவும் எனவே இப்பிரச்சினை தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் இது குறித்து சமூக ஊடகங்களில் பொது மக்கள் கருத்துகளை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும் இவ்விவகாரம் குறித்து உண்மையான, சரியான தகவல்கள் தெரியாமல் அறிக்கைகளை வெளியிடுவதை பொதுமக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பத்துமலை மின்படிகட்டு சர்ச்சை குறித்து கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் பத்திரிகை அறிக்கை போரை தாம் இனியும் நீட்டிக்க விரும்பவில்லை என்றும் இவ்விவகாரம் சுமூகமான முறையிலே தீர்க்கப்பட வேண்டும் என்று தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் இவ்விவகாரம் குறித்து தமது வழக்கறிஞர் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் தமக்கு ஆலோசனை கூறியுள்ளனர். மேலும் பத்துமலை திருத்தலம் பொதுமக்கள் சம்பந்தப்பட்டது என்பதால் இவ்விவகாரம் விரைவில் சுமூகமான முறையில் தீரும் என்று தாம் நம்புவதாக பாப்பாராய்டு தெரிவித்தார்.



