ஜோர்ஜ்டவுன், ஜனவரி-4, பினாங்கு, ஜோர்ஜ்டவுன் மாநகரின் பரபரப்பான பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி வைக்கும் அதிகபட்ச நேரமாக 2 மணி நேரங்கள் வரையறுக்கப்படவுள்ளன.
நெரிசலைக் குறைக்கவும், வாகன நிறுத்துமிட வசதி எல்லாருக்கும் நியாயமாகக் கிடைப்பதை உறுதிச் செய்யவும், இவ்வாண்டு பிற்பகுதியில் அது அமுலுக்கு வரும்.
அதற்கு முன்பாக சில முக்கியச் சாலைகளில் அது சோதனை செய்து பார்க்கப்படுமென பினாங்கு மாநகர மேயர் ராஜேந்திரன் அந்தோணி தெரிவித்தார்.
பினாங்குத் தீவில் வாகன நிறுத்துமிடக் கட்டணங்கள் வரும் மார்ச் தொடங்கி 50 விழுக்காடு உயரவிருக்கும் நிலையில், இப்புதிய 2 மணி நேர கட்டுப்பாடு அமுலுக்கு வருகிறது.
இது தவிர, மாநகரின் முக்கியச் சாலைகளில் சரக்குகளை ஏற்றவும் இறக்கவும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.
அதோடு, சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, ஒட்டுமொத்த பினாங்கு மருத்துவமனை வளாகத்துக்கும் சிறப்பு shuttle பேருந்து சேவை வழங்கப்படும்.
Double-parking பிரச்னையால் ஏற்படும் நெரிசலை சீராக்க முழு நேர பணியாளர்களும் நியமிக்கப்படுவர் என்றார் அவர்.
மக்கள், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றினாலே பாதி நெரிசல் குறைந்து விடுமென ராஜேந்திரன் சொன்னார்.