பல மாத திட்டமிடலுக்குப் பிறகே வெனிசுவலா அதிபர் அதிரடி கைது; உலகமே திரும்பிப் பார்க்கும் சம்பவத்தின் பின்னணி

வாஷிங்டன், ஜனவரி-5,
வெனிசுவலா அதிபர் Nicolás Maduro அமெரிக்காவால் கைதுச் செய்யப்பட்ட விதம், உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கைது நடவடிக்கை பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட ஓர் இரகசிய, நுணுக்கமான நடவடிக்கை என, அமெரிக்க இராணுவத் தரப்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேர்த்தியான உளவு தகவல் சேகரிப்பு, தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின் ஆய்வு ஆகியவை இதில் முக்கிய பங்காற்றியுள்ளன.
அதிபரின் நடமாட்டம், பாதுகாப்பு முறை மற்றும் நேர அட்டவணை ஆகியவை நெருக்கமாக கண்காணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, அவர் எங்கே உறங்குகிறார், என்ன சாப்பிடுகிறார், என்ன உடை அணிகிறார், என்னென்ன வளர்ப்புப் பிராணிகள் வைத்திருக்கிறார் என்றெல்லாம் நோட்டமிடப்பட்டுள்ளது.
வெனிசுவலா அரசாங்கத்தில் இருக்கும் ஒருவரே உளவுபேதாவாக உதவியுள்ள அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
கடைசியாக டிசம்பர் தொடக்கத்தில் திட்டம் இறுதிச் செய்யப்பட்டு, Maduro-வின் மாளிகை போன்ற மாதிரி செட் அமைத்து தாக்குலுக்கான ஒத்திகையும் பார்க்கப்பட்டுள்ளது.
அவரை கைதுச் செய்யும் போது எந்த எதிர்ப்பும் வராத வகையிலும், பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படாத வகையிலும் சரியான நேரம் தேர்வு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மிக விரைவாகவும் அமைதியாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிபர் மாளிகை வட்டாரங்களால் எதையும் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை என்பதோடு, எதையும் தடுக்கவும் முடியவில்லை.
கைதான வேகத்தில், Maduro-வும் அவரது மனைவியும் கடும் பாதுகாப்புடன் வெனிசுவலாவிலிருந்து வெளியே கொண்டுச் செல்லப்பட்டு, நியூ யோர்க் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை சட்ட அமுலாக்க நடவடிக்கையென அமெரிக்கா விளக்கம் அளித்தாலும், அதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்து உலக நாடுகள் கவனமாக கண்காணித்து வருகின்றன.



