Latestமலேசியா

பள்ளி கட்டிடத்தில் இருந்து விழுந்த 13 வயது மாணவன் பலத்த காயம்: கல்வி அழுத்தம் காரணமா?

கூலிம், அக்.06-கெடா, கூலிமில் உள்ள இடைநிலைப் பள்ளியொன்றின் கட்டிடத்தின் மூன்றாவது தளத்திலிருந்து விழுந்து 13 வயது சிறுவன் பலத்த காயமடைந்தான். அச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது.

படிக்கட்டு அருகே மாணவன் காயமடைந்த நிலையில் கிடந்ததைக் கண்ட அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் உடனடியாக காவல் துறைக்குத் தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அச்சமயம் மாணவன் சுயநினைவுடன் இருந்ததுடன், பின்னர் சிகிச்சைக்காக கூலிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூலிம் காவல்துறைத் தலைவர் Syamsul Sinring தெரிவித்தார்.

படிப்பு தொடர்பான மன அழுத்தம் காரணமாகவே வேண்டுமென்றே மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்ததாக அம்மாணவன் விசாரணையில் குறிப்பிட்டதாக அவர் கூறினார். அதோடு அதே பள்ளியில் நான்காம் படிவம் பயிலும் மூத்த சகோதரியுடன் தமது கல்வித் திறனை ஒப்பிட்டுப் பார்த்ததுடன், அம்மாணவன் அடுத்த வாரம் நடைபெறவுள்ள தேர்வுகள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்புகள் குறித்தும் கவலையில் இருந்ததாக Syamsul Sinring விளக்கினார்.

அதே சமயம், சம்பவத்துக்கு முந்தைய நாள் கல்வி மற்றும் குடும்பம் தொடர்பான மன அழுத்தம் குறித்து அம்மாணவன் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்ததை சில மாணவர்கள் கவனித்துள்ளனர். அப்பதிவு பின்னர் நீக்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அச்சம்பவம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!