
புத்ராஜெயா, மார்ச்-27- கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளையும் சேர்ந்த மாணவர்கள், ஏப்ரல் 21 தொடங்கி பள்ளிச் சீருடையில் தேசியக் கொடியின் சின்னத்தை அணிவது கட்டாயமாகும்.
நேற்று கல்வி அமைச்சு பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் அவ்வுத்தரவு இடம் பெற்றுள்ளது.
அப்புதிய விதிமுறைக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.
அனைத்து அரசுப் பள்ளிகள், அரசாங்க உதவிப் பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கழகங்கள் ஆகியவற்றுக்கு இப்புதிய வழிகாட்டி பொருந்தும்.
மற்ற கல்வி நிறுவனங்களும் அதனை அமுல்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றன.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நாட்டுப் பற்றையும் விசுவாசத்தையும் விதைக்கச் செய்யும் முக்கியப் பொறுப்பும் கடமையும் தங்களுக்கு இருப்பதாக கல்வி அமைச்சு கூறியது.
அதன் காரணமாகத் தான் அடிப்படையிலிருந்தே இம்முயற்சியைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டாக அது விளக்கியது.