
குவாந்தான், மார்ச்-12 – பஹாங்கில் நேற்று ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, இரண்டு சகோதரிகளை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.
Baby Hatch எனப்படும் தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் வெளியே வைக்கப்பட்டிருந்த தொட்டிலில் அக்குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
24 மற்றும் 25 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் ரொம்பினில் தனித்தனியாக கைதானதாக, குவாந்தான் போலீஸ் தலைவர் வான் சஹாரி வான் புசு தெரிவித்தார்.
முதல் சந்தேக நபரான 24 வயது வேலையில்லாத பெண் காலை 9.50 மணியளவில் ஒரு வீட்டில் கைதுச் செய்யப்பட்டார்.
அவரின் படுக்கையறையில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு மேஜையில் ‘கட்டுப்படுத்தப்பட்ட மருந்து’ மற்றும் ‘ADV’ என்று பெயரிடப்பட்டு சீல் செய்யப்பட்ட வெள்ளை பிளாஸ்டிக் பையும் கண்டுபிடிக்கப்பட்டது.
பையின் உள்ளே, பிரசவத்தைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மாத்திரைகள் அடங்கிய மூன்று சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை போலீஸார் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.
இரண்டாவது சந்தேக நபரான மூத்த சகோதரி, ரொம்பின் போலீஸ் தலைமையக வளாகத்தில் பிற்பகல் 3 மணியளவில் கைதுச் செய்யப்பட்டார்.
சகோதரிகள் இருவரும் மார்ச் 13 வரை தடுத்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.