Latestமலேசியா

பஹாங் மின்சாரப் பிரச்னை: அடிப்படை வசதிக்காக மக்கள் 13 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? – சிவக்குமார் கேள்வி

அண்மையில், பஹாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா சென்ற வாகனத்தை சாலையில் வழிமறித்த ஓர் ஆடவரும், அவரின் மனைவியும் சிறு வயது மகனும், 13 ஆண்டுகளாக மின்சார வசதியின்றி இருப்பதாக முறையிட்டது பெரும் வைரலானது தெரிந்ததே.

வாகனத்தை நிறுத்துமாறு ஓர் அட்டைப்பெட்டியில் எழுதி வைத்து காட்ட, சுல்தானும் வாகனத்தை நிறுத்தி அந்த ஆடவரின் மனக்குறைகளைக் கேட்டறிந்தார்.

அல்-சுல்தான் அப்துல்லாவின் இந்த பரிவுமிக்கச் செயல் மிகவும் பாராட்டுக்குரியது என்றும், அடிதட்டு மக்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுவதில்லை என்பதற்கும் ஓர் உதாரணம் என்றும், DSK எனப்படும் Dinamik Sinar Kasih குழுமத்தின் தலைவர் டத்தோ என். சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

என்றாலும், வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை நோக்கி நகரும் ஒரு நாட்டில், அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் 13 ஆண்டுகள் காத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார் அவர்.

மக்களின் குரலை உரிய அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கொண்டு சேர்க்கத் தவறியதே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என அவர் சாடினார்.

சிலாங்கூரில் இருந்துகொண்டு பஹாங் பிரச்னையைப் பேசுவது ஏன் என சிலர் கேட்களாம்; ஆனால் மக்களின் துயரங்களுக்கு மாநில எல்லையோ அல்லது அரசியல் பின்னணியோ கிடையாது என, சிவகுமார் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் ஒரு விஷயம் பரவிய பிறகுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மையில், மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதை அனைத்து தரப்பினரும் தங்களின் முதல் முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வேளையில், இந்த விவகாரம், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் உடனடி கவனத்துக்குச் சென்று, அவரும் அதனைத் தீர்ப்பதாகக் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!