Latestமலேசியா

பாகான் டாலாம் தொகுதியில் தமிழ் இடைநிலைப் பள்ளி: நிலம் இருந்தும் தாமதம் ஏன்? சட்டமன்றத்தில் குமரன் காட்டம்

ஜோர்ஜ்டவுன், மே-15-பாகான் டாலாம் தொகுதியில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கான நிலம் தயார் நிலையில் இருந்தும், அதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை மாநில அரசு ஏன் இன்னும் கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்கவில்லை என அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

​நேற்று நடைபெற்ற பினாங்கு மாநில சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய அவர், இப்பள்ளித் திட்டம் இன்னும் ‘ஆய்வு கட்டத்தில்’ இருப்பதாகக் கூறப்படுவதற்குக் கடும் அதிருப்தி தெரிவித்தார்.

“இது ஒன்றும் புதிய கோரிக்கை அல்ல; ஏற்கனவே பலமுறை நான் சட்டமன்றத்தில் இது குறித்துக் கேள்வி எழுப்பியும், இதுவரை தெளிவான பதில் கிடைக்கவில்லை” என அவர் சுட்டிக்காட்டினார்.

பள்ளியை அமைப்பதற்காக பாகான் டாலாம் பகுதியில் 4 ஏக்கர் நிலம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு விட்டதை நினைவுறுத்திய குமரன், “நிலம் ஒரு தடையாக இல்லாதபோது, விண்ணப்பம் செய்வதில் உள்ள சிக்கல் என்ன? இன்னும் கூடுதல் ஆய்வு தேவைப்படுகிறதா அல்லது நிர்வாக ரீதியிலான முட்டுக்கட்டைகள் ஏதும் உள்ளதா என்பது புரியவில்லை” என வினவினார்.

​மாநில அரசு தனது ஆய்வுகளை விரைந்து முடித்து, கல்வி அமைச்சிடம் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், ஒருவேளை இத்திட்டத்தில் ஏதேனும் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால், அவற்றுக்கான மாற்று வழிகளையாவது அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றார்.

என்றாலும், “மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மாநில அரசு மறந்துவிடக் கூடாது. தங்களின் கோரிக்கைகள் செவிசாய்க்கப்படாது என்ற விரக்தி நிலைக்கு மக்கள் தள்ளப்படக் கூடாது. விரைவில் இந்த விவகாரத்தில் மாநில அரசு ஒரு தீர்க்கமான முடிவை அறிவிக்க வேண்டும்” என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!