
புது டெல்லி, மே-7 – பாகிஸ்தான் மற்றும் அதன் கட்டுப்பாட்டிலிருக்கும் காஷ்மீர் பகுதியில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருப்பதால், தெற்காசியாவில் போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் விரைவில் முடிவுக்கு வர வேண்டுமென, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் சம்பவத்துக்குப் பிறகு இப்படியொன்று நடக்குமென்பது எதிர்பார்த்த ஒன்று தான் என அவர் சொன்னார்.
அவையிரண்டும் காலங்காலமாக மோதி வரும் நிலையில், போர் பதற்றம் விரைவிலேயே தணியட்டும் என்றார் அவர்.
இன்று காலை பாகிஸ்தானில் திவிரவாதிகளின் 9 இடங்களைக் குறி வைத்து இந்தியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியத் துப்பாக்கிக் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியயே அதுவென, இந்தியத் தற்காப்பு அமைச்சு கூறியது.
யாரையும் தேவையில்லாமல் சீண்டாமால் தீவிரவாதிகளை மட்டுமே குறி வைத்து இந்த ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ மேற்கொள்ளப்பட்டதாக அது கூறியது.
இந்தியா தாக்கிய இடங்களில், தடைச் செய்யப்பட்ட பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய மறைவிடமும் அடங்கும்.
ஜம்மு – காஷ்மீர் தாக்குதலின் பின்னணியில் அவ்வமைப்பே இருப்பதாக புது டெல்லி சந்தேகிக்கிறது.
இவ்வேளையில் இந்தியாவின் தாக்குதலை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷாரிஃப், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க எல்லா உரிமையும் தங்களுக்கிருப்பதாக அறிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் ஓடி ஒளிந்தாலும், அவர்களைப் பிடித்தே திருவோம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக சூளுரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.