ஜோர்ஜ்டவுன், நவம்பர்-27, பினாங்குத் தீவில் கார் நிறுத்துமிடக் கட்டணங்கள் அடுத்தாண்டு மார்ச் முதல் 50 விழுக்காடு உயருகின்றன.
பினாங்கு மாநகர மன்றமான MBPP அதனை உறுதிபடுத்தியது.
புதியக் கட்டண விகிதமானது, smart parking sensors பராமரிப்புக்கும், கணினி முறையை மேம்படுத்தும் செலவுகளைச் சமாளிக்கவும் உதவுமென மாநகர மேயர் ராஜேந்திரன் அந்தோணி FMT-யிடம் கூறினார்.
திருத்தப்பட்ட கட்டண விகிதத்தின் படி, 30 நிமிடங்களுக்கு வாகனங்களை நிறுத்த இனி 60 சென் வசூலிக்கப்படும்; நடப்பில் 40 சென் விதிக்கப்படுகிறது.
ஒரு மணி நேரத்திற்கான கட்டணம், 80 சென்னிலிருந்து இனி 1 ரிங்கிட் 20 சென்னாக உயரும்; ஒரு முழு நாளுக்கு இனி 9 ரிங்கிட் விதிக்கப்படும்; நடப்புக் கட்டணம் 6 ரிங்கிட்டாகும்.
பினாங்குத் தீவில் தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 80 சென் விதிக்கப்படுகிறது.
அதே செபராங் பிறையில் ஒரு மணி நேரத்திற்கு 40 சென் கணக்கிடப்படுகிறது.
இப்புதியக் கட்டண விகிதம், பினாங்குத் தீவில் உள்ள அனைத்து 19,000 வாகன நிறுத்துமிடங்களையும் உட்படுத்தும்.
இவ்வேளையில், வருடாந்திர வாகன நிறுத்துமிட அட்டைக்கான கட்டணம் 2025 மார்ச் 1 முதல், 1,800 ரிங்கிட்டிலிருந்து 1,200 ரிங்கிட்டுக்குக் குறைகிறது.
எனினும் மாதாந்திர அட்டை தொடர்ந்து 150 ரிங்கிட் என்ற விலையிலேயே விற்கப்படுமென்றார் அவர்.