
ஜோர்ஜ்டவுன் – ஆகஸ்ட்-4 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் 19 புதிய ஆணையர்களின் நியமனங்களை மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் அடுத்தாண்டு ஜூலை 31 வரை அவர்கள் பதவியிலிருப்பர் என, மாநில முதல்வர் Chow Kon Yeow கூறியுள்ளார்.
மாநில அரசு சார்பாக, அறப்பணி வாரியம் தொடர்பான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு வீடமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் துறைகளுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ சோமுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துரைத்த சுந்தரராஜூ, முதல்வரின் நம்பிக்கைக்கு ஏற்ப கடமையைச் செய்வேன் என்றும், அறப்பணி வாரியம் துடிப்புடன் எப்போதும் போல் செயல்படுவதை உறுதிச் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே, வாரியத்தின் 19 ஆணையர்களில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், செனட்டர் Dr லிங்கேஷ்வரன், சட்டமன்ற உறுப்பினர்கள் குமரன் கிருஷ்ணன், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம், பினாங்கு மாநில ம.இ.கா தலைவர் டத்தோ தினகரன் ஜெயபாலன் உள்ளிட்டோரும் அடங்குவர்.
நியமனம் பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட முதல்வர், மக்களின் ஆணையை செயல்படுத்துவதிலும், பினாங்கு இந்தியச் சமூக – பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்துவதிலும் அவர்கள் சிறந்த சேவையை ஆற்றுவர் என நம்பிக்கைத் தெரிவித்தார்.