பிரம்பால் அடிக்கும் தண்டனையை பள்ளிகளில் மீண்டும் கொண்டு வர லிம் குவான் எங் பரிந்துரை

கோலாலாம்பூர், அக்டோபர்-16,
மாணவர்களை ஒழுக்கப்படுத்தவும், பயங்கரமான துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் பிரம்படி தண்டனை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என முன்மொழிந்துள்ளார் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங்.
தவிர, பள்ளிகளில் CCTV கேமராக்களை பொருத்துவதோடு பகடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு முறையையும் உடனடியாக செயல்படுத்த வேண்டுமென அவர் மக்களவையில் பேசினார்.
அந்த பகடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு முறை, மேலும் ஆக்ககரமாக இருக்க வேண்டும்; குறிப்பாக நடக்கும் சம்பவங்களை கண்டறிந்து புகாரளிப்பதில் பெற்றோர்களும் மாணவர்களும் பங்காற்றும் வகையில் அது செயல்பட வேண்டும்.
அதே சமயத்தில், நாடு முழுவதும் உள்ள 10,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் CCTV கேமராக்களை பொருத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்றும், இதற்கு 1 பில்லியன் ரிங்கிட் வரை செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குழந்தைகளின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கையை மக்கள் நிச்சயமாக ஆதரிப்பார்கள் என்றும் குவான் எங் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கு பள்ளிகளில் எல்லைமீறிய பகடிவதை, வகுப்பறையில் மாணவி கும்பலாக கற்பழிப்பு, பள்ளி வளாகத்தில் மாணவி கத்தியால் குத்திக் கொலை என, பள்ளி மாணவர்களை உட்படுத்திய வன்முறை சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருவதை அடுத்து, இந்த பிரம்படி தண்டனை பரிந்துரை மீண்டும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக கருத்துகள் பரவி வருகின்றன