பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் நெரிசல் மோசமானது தான் மிச்சம்; சாலையில் கூடாரங்களை அமைக்கச் சொல்லி யார் கேட்டார்கள்? சரவணன் காட்டம்

கோலாலம்பூர், அக்டோபர்-1,
ஏற்கனவே நெரிசல் கடுமையாக உள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில், நிலைமையை மோசமாக்கும் வகையில் சாலையில் தீபாவளி விற்பனைக் கூடாரங்கள் போடப்பட்டுள்ளன.
இதையெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்து தான் செய்கிறார்களா என, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் காட்டமாகக் கேட்டுள்ளார்.
கூடாரங்களுக்காக ஒரு பக்கம் சாலை மூடப்பட்டுள்ளது, மறுபக்கம் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில் சாலையில் எப்படி வாகனங்கள் சீராக இயங்குமென, நேற்று அங்கு நேரில் சென்று நிலவரங்களை கண்டறிந்த பின் அவர் கேள்வி எழுப்பினார்.
இப்போதே நெரிசல் மோசமாகியுள்ளது, தீபாவளி நெருங்கும் போது நிலைமை எப்படி இருக்கும் என அவர் அச்சத்தை எழுப்பினார்.
பிரிக்ஃபீல்ட்ஸ் நிலைக்குத்தினால் பங்சார் வரை போக்குவரத்து ஸ்தம்பித்து போகும் என்பது, மாநகர மேயருக்கும் கூட்டரசு பிரதேச அமைச்சருக்கும் தெரியாதா என்றும் சரவணன் கேட்டார்.
இந்தக் கூடாரங்களை வியாபாரிகள் கேட்கவில்லை; கூடாரங்களும் வலுவானவையாக இல்லை, பலத்த காற்றடித்தாலே பறந்துபோய் விடும் நிலையில் உள்ளன.
போதாக்குறைக்கு 2,500 டெப்பாசிட் முன்பணம் வேறு…அவ்வளவு பணத்திற்கு சிறு வியாபாரிகள் எங்கே போவார்கள் என்றும் அவர் கேட்டார்.
நெரிசல் விரக்தியில் வாடிக்கையாளர்கள் உள்ளே வர மாட்டார்கள் என்பதே நிதர்சன உண்மை என்றார் அவர்.
எனவே, இது போன்ற முடிவுகளை எடுக்கும் முன், அமைச்சரோ மேயரே களத்தில் இறங்கி பார்த்தால் தான் மக்களின் கஷ்டம் புரியும் என சரவணன் கேட்டுக் கொண்டார்.