
கோலாலம்பூர், ஆகஸ்ட்-2 – ஆஸ்ட்ரோவின் ஏரா மலாய் வானொலி அறிவிப்பாளராக தம்முடன் போடப்பட்ட ஒப்பந்தம் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டதை, மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் (Syed Saddiq Syed Abdul Rahman) உறுதிப்படுத்தியுள்ளார்.
அறிவிப்பாளர் பணிக்கு கிடைக்கும் ஊதியத்தை அப்படியே மூவாரில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 20 உயர் கல்விக் கூட மாணவர்களுக்குக் கொடுக்க முடிவுச் செய்யப்பட்டிருந்தது.
இரு தரப்பும் இணக்கம் கண்டு எல்லாமும் கைகூடி வந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதனை தம்மால் புரிந்துகொள்ள முடிவதாகவும், ஏரா நிர்வாகம் மற்றும் ஆஸ்ட்ரோ நிறுவனத்தாரின் அம்முடிவை மதிப்பதாகவும் 32 வயது சைட் சாடிக் தெரிவித்தார். ஒப்பந்தம் இரத்தானாலும் பேசியத் தொகையை ஏரா நிர்வாகம் ஒப்படைத்து விட்டது.
எனவே, தான் வாக்குறுதி அளித்த படி, அத்தொகை மூவார் மாணவர் உபகாரச்சம்பள நிதிக்கு கொடுக்கப்படும் என, சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு வீடியோவில் அவர் சொன்னார்.
3 Pagi ERA காலை நேர நிகழ்ச்சிக்கு நடப்பிலிருக்கும் 3 அறிவிப்பாளர்களுடன் இணைந்து அறிவிப்பு செய்ய, சைட் சாடிக் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தெரிகிறது.