
பட்டர்வெர்த் , ஏப்-1-பினாங்கு பிறை சட்டமன்ற தொகுதியில் பழம் பெரும் ஆலயங்களில் ஒன்றான பிறைதோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பங்காற்ற முடிந்தது குறித்து தாம் மிகவும் மகிழ்சியும் திருப்தியும் அடைவதாக பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ தெரிவித்துள்ளார்.
இன்று அந்த ஆலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த கும்பாபிஷேகத்திற்காக, கோயில் மண்டபத்தை மேம்படுத்த உதவி கோரி தம்மை அணுகியபோது, இது முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பொறுப்பு என்பதை உணர்ந்து 400,000 ரிங்கிட் மதிப்பிலான மண்டப மேம்பாட்டுப் பணியாகத் தொடங்கி, பின்னர் டான்ஸ்ரீ ரமேஷின் ஆதரவு மற்றும் அவரது தலைமையின் கீழ், விரைவில் மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்ட மற்றும் லட்சியமிக்க ஒரு மறுசீரமைப்புத் திட்டமாக உருவெடுத்தது.
நன்கொடையாளர்கள் மற்றும் நல்விரும்பிகளின் தளராத அர்ப்பணிப்புடன் இணைந்து, இந்த முயற்சி 1.7 மில்லியன் ரிங்கிட் திட்டமாக உருமாறியதாக சுந்தரராஜு குறிப்பிட்டார்.
அதன் விளைவாக, பாரம்பரியத்திற்கும் ஆன்மீக முக்கியத்துவத்திற்கும் ஏற்றவாறு ஒரு பிரம்மாண்டமான ஆலயம் உருவாகி இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது குறித்து மகிழ்ச்சியும் தன்நிறைவும் அடைவதாக அவர் தெரிவித்தார்.
இந்த கும்பாபிஷேக நிகழ்வில் டாக்டர் லிங்கேஸ்வரன், டத்தோஸ்ரீ ஆர். அருணாசலம், மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ சுரேஸ், பினாங்கு ம.இ.கா தலைவர் டத்தோ ஜெ. தினகரன் , டத்தோ மரியதாஸ் , மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் உட்பட சுற்று வட்டார பக்தர்களும் கலந்து சிறப்பித்தனர்



