
ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-3, பினாங்கு, ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மீண்டும் அதன் நிர்வாகத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் நவம்பர் 30-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஆலயத்தைத் தங்களிடம் ஒப்படைத்து வாக்குறுதியை நிறைவேற்றியதாக, தேவஸ்தான தலைவர் எம்.பி.ஐயப்பன் தெரிவித்தார்.
ஆலயம் திரும்ப கிடைக்க வழி வகுத்த பிறை சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ சோமு, இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர், இதர ஆணையர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இவ்வேளையில் நன்றித் தெரிவித்துக் கொள்வதாக வீடியோ வாயிலாக ஐயப்பன் கூறினார்.
ஆலய நிர்வாகத்துக்கும் அறப்பணி வாரியத்துக்கும் இடையில் சில விஷயங்கள் இணக்கம் காணப்பட்டதை அடுத்து, ஆலயம் சுமூகமாகக் கைமாறியுள்ளது.
அறப்பணி வாரியத்திற்கு எதிராக தொடுத்துள்ள நீதிமன்ற வழக்கைத் திரும்பப் பெறுவது, சங்கப் பதிவிலாகாவில் ஆலயத்தைப் பதிவது, ஆண்டு பொதுக் கூட்டத்தை நடத்துவது, புதிய வங்கிக் கணக்கைத் திறப்பது ஆகிய 4 நிபந்தனைகளுக்கும் தேவஸ்தானம் ஒப்புக் கொண்டதாக ஐயப்பன் கூறினார்.
அம்முயற்சியை முன்னெடுத்து வெற்றிரமாக நிறைவேற்றியப் பெருமை டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ சோமுவையே சேருமென்றார் அவர்.
பழைய நிர்வாகத்தினரின் செயல்பாடுகளால் முன்னதாக பதிவு இரத்தான ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தை, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கையப்படுத்தியது.
அதை எதிர்த்து பத்தாண்டுகளாக, அடுத்து பொறுப்புக்கு வந்த நிர்வாகத்தினர் சட்டப் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், தற்போது ஒரு வழியாக சுமூகத் தீர்வு எட்டப்பட்டுள்ளது.
பழைய நிர்வாகத்தின் முறையற்ற மேலாண்மையால் அறப்பணி வாரியத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தையும், அதன் நிலத்தையும் தனியார் அமைப்புக்கு மாற்றத் திட்டமிடப்பட்டிருப்பது குறித்து, உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி.ராமசாமி நேற்று கவலைத் தெரிவித்திருந்தார்.
ஆலயங்களை, தனியார் அமைப்புகளுக்குத் தாரை வார்ப்பதென்பது, இந்துக்களின் நலன்களைப் பாதுகாக்கும் அறப்பணி வாரியத்தின் நோக்கத்தையே சீர்குலைப்பதாக, அதன் முன்னாள் தலைவருமான ராமசாமி முகநூல் வாயிலாகக் கூறியிருந்தார்.