பிலிப்பின்ஸ் நாட்டில் நில நடுக்கம்; இதுவரை 22 பேர் பலி

மணிலா, அக்டோபர்-1,
மத்திய பிலிப்பின்ஸ் நகரான Cebu-வில் ரிக்டர் அளவைக் கருவியில் 6.9-தாக பதிவாகிய வலுவான நில நடுக்கத்தில், குறைந்தது 22 பேர் பலியாகியுள்ளனர்.
சரிந்து விழுந்த விளையாட்டு மையத்தில் சிக்கி இறந்த நால்வரும், கட்டட இடிபாடு மேலே விழுந்து மரணமடைந்த 1 சிறுமியும் அவர்களில் அடங்குவர்.
அங்குள்ள Leyte தீவில் நேற்றிரவு 10 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.
90,000 பேர் வசிக்கும் Bogo கரையோர நகரில் அது மையமிட்டிருந்தது.
அதில் ஏராளமான கட்டடங்கள், சாலைகள் கடுமையாக சேதமுற்றன.
மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
ஏராளமானோர், இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என ஐயுறப்படுகிறது.
இதையடுத்து மீட்புப் படைகளோடு மருத்துவக் குழுக்களும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முழு வீச்சில் அனுப்பப்பட்டு வருகின்றன.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றாலும், ஆபத்தான கட்டடங்களை விட்டு தள்ளியிருக்குமாறு, அதிகாரிகள் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
ஆசிய பசிஃபிக் நெருப்பு வளையத்தில் அமைந்திருப்பதால், தீவு நாடான பிலிப்பின்ஸில் அடிக்கடி எரிமலை வெடிப்பும் நில நடுக்கம் ஏற்படுவதும் சாதாரணமாகும்.